இந்திய தண்டனை சட்டம் பிரிவு 181 - 200

IPC-181\nஎவரேனும் ஒரு சத்தியப் பிரமாணம் அல்லது உறுதிமொழியின்பால் சட்டப்படி கட்டுப்பட்டு, ஏதாவதொரு பொருளில், யாரேனும் ஒரு பொதுப் பணியாளரிடமோ அல்லது அத்தகைய சத்தியப் பிரமாணம் அல்லது உறுதிமொழியை செய்து வைக்க அதிகாரம் கொண்ட பிற நபரிடமோ உண்மையைக் கூற வேண்டியவர், அத்தகைய பொதுப்பணியாளரிடமோ அல்லது மேற்கூறப்பட்டவாறு உள்ள பிற நபரிடமோ, அப்பொருளின்மீது பொய்யானது என அவருக்குத் தெரிந்தே அல்லது நம்பியோ அல்லது அது உண்மையானது என்று நம்பாமலோ, ஏதாவதொரு பொய்யான வாக்குமூலத்தை அளித்தால், மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும்.மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். IPC-182\nஒரு பொது ஊழியரிடம் நெஞ்சறிந்தே பொய்யை கூறுகிறோம். அதன் விளைவாக அந்த அதிகாரி தன்னுடைய கடமையை சரிவர செய்ய முடியாமல் தவறுதலாக நடக்க வேண்டி நேரிடும். தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி பிறருக்கு தொல்லை தர நேரிடலாம். ஆகவே அத்தகைய பொய் தகவல் கொடுத்தவருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைக்காவல் அல்லது ஆயிரம் ரூபாய்க்கு உட்பட்ட அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். உள்நோக்கத்துடன் பொய்யான தகவலைத் தந்து, பொதுப் பணியாளர் அவரின் சட்டப்படியான அதிகாரத்தைப் பயன்படுத்த செய்து, மற்றொரு நபருக்கு தீங்கு எவரேனும், பொய்யானது என அவருக்குத் தெரிந்த அல்லது நம்புகிற ஏதாவதொரு தகவலை, யாரேனும் ஒரு பொதுப் பணியாளருக்குத் தந்து அதன்மூலம் அத்தகைய பொதுப் பணியாளரை, உள்நோக்கத்துடன் பின்வருவனவற்றை அவர் செய்ய வைத்தால் அல்லது அதன்மூலம் செய்ய வைக்கப்படலாம் என அதைத் தெரிந்தே செய்ய வைத்தால்- (a ) எதைப்பற்றி தகவல் கொடுக்கப்படுகிறதோ அக்கொடுக்கப்பட்ட அத்தகைய தகவலின் பொருண்மை குறித்து உண்மையான நிலை அவருக்குத் தெரிந்திருக்கும்போது அத்தகைய பொதுப் பணியாளர் செய்யக் கூடாத அல்லது செய்யாமல் விடக்கூடாத எதையும் செய்ய அல்லது செய்யாது விடும்படி செய்ய அல்லது (b ) அத்தகைய பொதுப் பணியாளரின் சட்டப்பூர்வமான அதிகாரத்தை யாரேனும் ஒரு நபருக்குத் தீங்கு அல்லது தொல்லை தர பயன்படுத்த, ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு சிறைத்தண்டணையுடன் அல்லது ரூபாய் ஆயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டுகள் (a ) A என்பவர் ஒரு நடுவரிடம், அவருக்குக் கீழமைப் பணியிலுள்ள ஒரு காவல் அலுவலரான z என்பவர், பணியில் அசட்டை அல்லது தவறான நடத்தையின்படி அவர் குற்றவாளி என்ற தகவலை, அத்தகவல் பொய்யானது எனத் தெரிந்தும் அல்லது அத்தகைய தகவலினால்;அந்நடுவர் அந்த z என்பவரைப் பணியிலிருந்து நீக்கக்கூடும் என தெரிந்தே தெரிவிக்கிறார்.A இச்சட்டப்பிரிவில் வரையறுக்கப்பட்டுள்ள குற்றத்தைப் புரிந்திருக்கின்றார். (b )A என்பவர், z என்பவர் தடை செய்யப்பட்ட உப்பை ஒரு ரகசிய இடத்தில் வைத்திருக்கிறார் என்றும் ஒரு பொதுப் பணியாளருக்கு, அத்தகைய தகவல் பொய்யானது என தெரிந்தும் மற்றும் அவ்வாறு கொடுக்கப்படும் பொய்யான தகவலின் விளைவினால், z க்கு தொல்லை கொடுக்கும் விதமாக, z இன் இருப்பிடத்தில் சோதனை மேற்கொள்ளப்படக் கூடுமென்றும் தெரிந்தே, அப்பொய் தகவலைத் தெரிவிக்கிறார்.A இச்சட்டப்பிரிவில் வரையறுக்கப்பட்டுள்ள குற்றத்தைப் புரிந்திருக்கின்றார். (c ) A என்பவர் ஒரு காவல்துறை காவலரிடம், தான் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் வைத்துத் தாக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டதாக பொய்யான தகவலைத் தருகிறார், அப்படி தாக்கியவர்களில் எந்தஒரு நபரின் பெயரையும் அவர் குறிப்பிட்டு கூறவில்லை.ஆனால் அவரால் அப்படி கூறப்பட்ட தகவலின் விளைவாக, காவல் துறையினர் அக்கிராமத்திலுள்ளவர்களுக்கு அல்லது அவர்களில் சிலருக்கு தொல்லை தரும்படி விசாரணை நடத்தி மற்றும் சோதனை செய்வார்கள் என்று தெரிந்தும் அவ்வாறு தகவல் கூறிருக்கிறார், இச்சட்டப்பிரிவின் கீழ் ஒரு குற்றத்தை A புரிந்திருக்கின்றார். IPC-183\nஎவரேனும், யாரேனும் ஒரு பொதுப்பணியாளரின் சட்டபூர்வமான அதிகாரத்தின்படி ஏதாவதொரு சொத்து கையகப்படுத்தப்படுவதை, அத்தகைய பொதுப் பணியாளர் என்று அவருக்குத் தெரிந்தே அல்லது அவ்வாறு நம்புவதற்கு நியாயமான காரணமிருக்கும்போது ஏதாவதொரு எதிர்ப்பு தெரிவித்தால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது ரூபாய் ஆயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-184\nஎவரேனும், யாரேனும் ஒரு பொதுப் பணியாளரின் சட்டபூர்வமான அதிகாரத்தினால் அவர் பொதுப் பணியாளர் என்ற முறையில் செய்யும் விற்பனைக்குரிய சொத்தின் ஏதாவதொரு விற்பனையை உள்நோக்கத்துடன் தடுத்தால், ஒரு மாதம் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது ஐநூறு ரூபாய் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-185\nஎவரேனும், சட்டபூர்வமான அதிகாரம் கொண்ட ஒரு பொதுப் பணியாளரால், அவர் பொதுப் பணியாளர் என்ற முறையில் நடத்தும் ஏதாவதொரு சொத்தின் விற்பனையில், ஏதாவதொரு சொத்தை யாரேனும் ஒரு நபரின் கணக்கில், அது அவருக்காகவோ அல்லது யாரேனும் பிறருக்காகாகவோ, அவ்விற்பனையில் அச்சொத்தை வாங்குவதற்கு ஒரு சட்டப்படியான தகுதியின்மையின்கீழ் அப்பிற நபர் இருக்கின்றார் என அவருக்கு தெரிந்தே ஏலத்தில் வாங்கினால் அல்லது எடுத்தால், அல்லது அந்த ஏலத்தை நடத்துகின்ற பொதுப்பணியாளர் அத்தகைய ஏலத்தை நடத்த அவர் கொண்டுள்ள கடப்பாடுகளுக்கு மாறான உள்நோக்கத்துடன் அத்தகைய சொத்தை ஏலத்தில் எடுத்தால், ஒரு மாதம் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது ரூபாய் இருநூறு வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-186\nஒரு பொது ஊழியரை தன்னுடைய கடமையை செய்ய முடியாமல் தடுத்தால் மூன்று மாதங்களுக்கு மேற்படாத சிறைக்காவல் அல்லது 500 ரூபாய்க்கு உட்பட்ட அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும் (353, 332, 333 IPC). பொதுப் பணிகளை நிறைவேற்றுகையில் பொதுப் பணியாளரைத் தடுத்தல் எவரேனும், யாரேனும் ஒரு பொதுப் பணியாளரை அவரின் பொதுப்பணிகளை நிறைவேற்றுகையில் தன்னிச்சையாகத் தடுத்தால், மூன்று மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது ரூபாய் ஐநூறு வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-187\nஎவரேனும், யாரேனும் ஒரு பொதுப் பணியாளர் அவரின் பொதுப்பணியை நிறைவேற்றும்போது அவருக்கு உதவி செய்ய அல்லது அளிக்க சட்டப்படி கடமைப்பட்டுள்ளபோது, உள்நோக்கத்துடன் அத்தகைய உதவியை அளிக்கத் தவறினால் ஒரு மாதம் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது ரூபாய் இருநூறு வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். மற்றும் நீதிபரிபாலன நீதிமன்றத்தால் சட்டப்படி பிறப்பிக்கப்பட்ட ஏதாவதொரு நீதித்துறை ஆணையை நிறைவேற்ற அல்லது ஒரு குற்றம் புரியப்படுவதை தடுக்க, அல்லது ஒரு கலகம் அல்லது சச்சரவை அடக்க அல்லது ஒரு குற்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட அல்லது குற்றவாளியான அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலிலிருந்து தப்பியோடிவிட்ட ஒரு நபரைக் கைது செய்யும் நோக்கங்களுக்காக அத்தகைய வேண்டுகோள் சட்டப்படி அதிகாரம் கொண்ட ஒரு பொதுப் பணியாளரால் கோரப்பட்டிருந்தால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான சாதாரண சிறைத்தண்டனையுடன் அல்லது ரூபாய் ஐநூறு வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-188\nஎவரேனும், ஒரு உத்தரவைப் பிரகடனப்படுத்த சட்டப்படி அதிகாரம் கொண்ட ஒரு பொதுப் பணியாளரால் அத்தகைய உத்தரவு பிரகடனப்படுத்தப்பட்டது என தெரிந்தே, ஒருவரை ஒரு குறிப்பிட்ட செயலை தவிர்க்கவோ அல்லது அவரது உடைமையில் அல்லது அவரது நிர்வாகத்தின் கீழ் உள்ள குறிப்பிட்ட சொத்து குறித்தான குறிப்பிட்ட உத்தரவை நிறைவேற்றுவதாகவோ அவர் கட்டளைப்பட்டிருக்கும் போது, அத்தகைய கட்டளைக்கு கீழ்ப்படிய மறுத்தால்; அத்தகைய கீழ்ப்படியாமையானது, சட்டப்படி பணியமர்த்தப்பட்டுள்ள யாரேனும் ஒரு நபருக்கு தடை, தொல்லை அல்லது தீங்கை அல்லது தடை, தொல்லை அல்லது தீங்கை விளைவிக்கக்கூடிய அபாயத்தைக் கொண்டிருப்பதை ஏற்படுத்துகிறது அல்லது ஏற்படுத்தப்படலாமென்றால் ஒரு மாதம் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான சாதாரண சிறைத்தண்டனையுடன் அல்லது ரூபாய் இருநூறு வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். மற்றும் அத்தகைய கீழ்ப்படியாமை, மனித உயிருக்கு, ஆரோக்கியத்திற்கு அல்லது பாதுகாப்பிற்கு அபாயத்தை விளைவித்தால் அல்லது விளைவிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தினால் அல்லது ஒரு கலகம் அல்லது சச்சரவை விளைவித்தால் அல்லது விளைவிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தினால் ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது ரூபாய் ஆயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். விளக்கம் :-குற்றம் புரிந்தவர், தீங்கை விளைவிக்க உள்நோக்கம் கொண்டிருக்க வேண்டும் அல்லது அவரது கீழ்ப்படியாமை தீங்கினை ஏற்படுத்திவிடலாமென்று திட்டமிட்டிருக்க வேண்டும் என்பது அவசியமில்லாதது, கீழ்ப்படியாதிருக்கும் அந்த உத்தரவைப் பற்றி அவர் தெரிந்திருக்க வேண்டும், மற்றும் அவரின் கீழ்ப்படியாமை தீங்கை விளைவிக்கிறது, அல்லது விளைவிக்கலாமென்று தெரிந்திருந்தாலே போதுமானது. எடுத்துக்காட்டு ஒரு உத்தரவை சட்டப்படி பிரகடனப்படுத்த அதிகாரம் கொண்ட ஒரு பொதுப் பணியாளரால், ஒரு மத ஊர்வலம் ஒரு குறிப்பிட்ட தெருவின் வழியே செல்லக்கூடாது என கட்டளையிட்டு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது, A என்பவர் அந்த உத்தரவுக்கு தெரிந்தே கீழ்ப்படியாமலிருக்கிறார்.மற்றும் அதனால் கலவரம் ஏற்படும் அபாயத்தை ஏற்படுத்துகிறார்.இச் சட்டப்பிரிவின்படி வரையறுக்கப்பட்டுள்ள குற்றத்தை A புரிந்திருக்கின்றார். IPC-189\nஎவரேனும், யாரேனும் ஒரு பொதுப் பணியாளருக்கு, அல்லது அப்பொதுப் பணியாளர் அக்கறை கொண்டவர் என தாம் நம்பும் யாரேனும் ஒரு நபருக்கு, அத்தகைய பொதுப் பணியாளர் புரியும் பொதுப்பணிகளின் தொடர்புடைய ஏதாவதொரு செயலை செய்யாமலிருக்க அல்லது தாமதப்படுத்தும் நோக்கத்திற்க்காக அப்பொது பணியாளரைத் தூண்ட தீங்கு விளைவிப்பதாக ஏதாவதொரு அச்சுறுத்தலைச் செய்தால் இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-190\nஎவரேனும், ஏதாவதொரு தீங்கிற்கெதிராக பாதுகாப்பு கொடுக்க அல்லது அத்தகைய பாதுகாப்பு கொடுக்கப்படச் செய்ய சட்டப்படி அதிகாரம் கொண்ட யாரேனும் ஒரு பொதுப்பணியாளரிடம், பொதுப் பணியாளர் என்ற முறையில் ஏதாவதொரு தீங்கு விளைவித்தலிலிருந்து பாதுகாக்க யாரேனும் ஒரு நபர், ஒரு சட்டப்படியான விண்ணப்பம் கொடுப்பதிலிருந்து பின்வாங்க அல்லது விலகியிருக்க தூண்டும் நோக்கத்திற்காக தீங்கு விளைவிக்க அச்சுறுத்தினால் ஒரு வருடம் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-191\nஎவரேனும், ஒரு சத்தியப் பிரமாணத்தினால் அல்லது சட்டத்தின் ஒரு வெளிப்படையான ஷரத்தினால் உண்மையைக் கூற சட்டத்தின்படி கடமைப்பட்டிருக்கும் போது அல்லது ஏதாவதொரு பொருளின் மீது ஒரு சத்தியப் பிரமாணம் அளிக்க சட்டத்தின்படி கடமைப்பட்டிருக்கும் போது பொய்யான ஏதாவதொரு வாக்குமூலத்தை, மற்றும் அவ்வாக்குமூலம் பொய்யானதென்று தெரிந்தே அல்லது அவ்வாறு நம்பியோ அல்லது அது உண்மையானது என நம்பாமலோ அளித்தால், பொய் சாட்சியம் அளிக்கிறார் எனக்கூறப்படும். விளக்கம் 1:-ஒரு வாக்குமூலம், வாய்மொழியாகவோ அல்லது வேறுவிதமாகவோ கூறப்பட்டிருந்தாலும், அது இச்சட்டப்பிரிவின் பொருளிற்குள் வரும். விளக்கம் 2:-சான்றுக் கையொப்பமிடும் நபரது ஒரு பொய்யான வாக்குமூலம் பற்றிய நம்பிக்கை, இச்சட்டப்பிரிவின் பொருளில் வரும், மற்றும் தாம் நம்பாத ஒரு பொருளை நம்புவதாகக் கூறுவது வாயிலாகவும் மற்றும் அதேபோல் தாம் அறியாத ஒரு பொருளை அறிந்ததாகக் கூறுவது வாயிலாகவும், ஒரு நபர் பொய் சாட்சியம் அளித்த குற்றத்திற்கு குற்றவாளியாகலாம். எடுத்துக்காட்டுகள் (a ).ரூபாய் ஓராயிரத்தை, z இடமிருந்து பெறுவதற்கான B என்பவருடைய நியாயமான கோரிக்கைக்கு ஆதரவாக, நீதிமன்ற விசாரணையில், B இன் நியாயமான கோரிக்கையை z ஒத்துக்கொண்டு கூறியதை தான் கேட்டதாக, A என்பவர் சத்தியப் பிரமாணம் செய்து பொய்யாகக் கூறுகிறார்.A பொய் சாட்சியத்தை அளித்துள்ளார். (b ) ஒரு சத்திய பிரமாணத்தின்படி உண்மையைக் கூறக் கடமைப்பட்ட, A என்பவர் ஒரு குறிப்பிட்ட கையொப்பம் z இன் உடையது என்று நம்பாவிட்டாலும் கூட, அக்கையொப்பம் z இன் உடையது தான் என நம்புவதாகக் கூறுகிறார்.இங்கு A தான் அதைப் பொய்யெனத் தெரிந்தும் கூறுகிறார்.மற்றும் அதனால் அவர் பொய் சாட்சியம் அளிக்கிறார். (c ) z என்பவரின் கையெழுத்தின் பொது இயல்பை அறிந்த A என்பவர், குறிப்பிட்ட கையெழுத்து ஒன்று z என்பவருடையது என தான் நம்புவதாகக் கூறுகிறார்.A நன்னம்பிக்கையில் அவ்வாறு கூறுகிறார்.இங்கு A இன் வாக்குமூலமானது, அவருடைய நம்பிக்கையை மட்டுமே சார்ந்தது, மற்றும் அவருடைய நம்பிக்கையின் காரணமாக அது உண்மையானது மற்றும் ஆகையினால், அக்கையெழுத்து z உடையதாக இல்லாமல் இருந்தாலும், A பொய் சாட்சியம் அளித்திருக்கவில்லை. (d ).ஒரு சத்யபிரமாணத்தினால் உண்மையைக் கூறக் கடமைப்பட்ட A என்பவர், ஒரு குறிப்பிட்ட பொருளைப்பற்றி எதையும் அறிந்திராதபோது, z என்பவர் ஒரு குறிப்பிட்ட நாளில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்தது தனக்குத் தெரியுமென கூறுகிறார்.z அந்த இடத்தில் அக்குறிப்பிட்ட நாளில் இருந்திருந்தாலும் அல்லது இல்லாதிருந்தாலும், A பொய் சாட்சியம் அளிக்கிறார். (e ).சத்திய பிரமாணத்தின்படி உண்மையாகப் பொருள் விளக்கம் கொடுக்க அல்லது உண்மையாக மொழி பெயர்க்க கடமைப்பட்டுள்ள விளக்கியுரைப்பவர் அல்லது மொழி பெயர்ப்பாளாராகிய A என்பவர், அவர் உண்மையென்று நம்பாத மற்றும் உண்மையல்லாத ஒரு பொருள் விளக்கத்தையோ அல்லது மொழி பெயர்ப்பையோ, ஒரு வாக்குமூலத்தின் அல்லது ஆவணத்தின் உண்மையான பொருள் விளக்கம் அல்லது மொழி பெயர்ப்பு என்று கூறுகிறார் அல்லது சான்றளிக்கிறார்.A பொய் சாட்சியம் அளித்தவராகிறார். IPC-192\nஎவரேனும், ஏதாவதொரு கணக்குப் புத்தகத்தில் அல்லது பதிவேட்டில் அல்லது மின்னணுப் பதிவில் ஏதாவதொரு சூழ்நிலை இருப்பதாக ஏற்படுத்தி அல்லது ஏதாவதொரு பொய்யான குறிப்பை ஏற்படுத்தி அல்லது ஒரு பொய்யான குறிப்பை கொண்டிருக்கிற ஏதாவதொரு ஆவணத்தை அல்லது மின்னணுப் பதிவை உண்டாக்கி, அத்தகைய சூழ்நிலையில் உள்நோக்கத்துடனான அத்தகைய பொய்யான குறிப்பு அல்லது பொய்யான வாக்குமூலம் ஒரு நீதிமன்ற செயல் நடவடிக்கையில் அல்லது ஒரு பொதுப்பணியாளரின் முன்னிலையில் அவர் பொதுப் பணியாளர் என்ற முறையில் ஓர் இசைவுமுறைத் தீர்ப்பாளரின் முன்னிலையில் சட்டப்படி எடுக்கின்ற ஒரு செயல் நடவடிக்கையில் மற்றும் அத்தகைய சூழ்நிலையில், அப்பொய்யான குறிப்பு அல்லது அப்பொய்யான வாக்குமூலம், அத்தகைய செயல் நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர் முன்பு ஒரு சாட்சியாக ஆகி, அச்சாட்சியத்தின் மீது ஒரு கருத்தை உருவாக்கும் அத்தகைய செயல் நடவடிக்கையின் முக்கியமான முடிவிற்கான அப்பொருள் பற்றி, அச்சாட்சியத்தின் பேரில் தவறான ஒரு அபிப்பிராயத்தை ஏற்படுத்த அது காரணமாக அமைந்தால், அத்தகைய நபர் பொய் சாட்சியத்தைப் புனைந்ததாகக் கூறப்படுகிறார் . எடுத்துக்காட்டுகள் (a ) A என்பவர், z என்பவரின் ஒருபெட்டியில்தான் நகைகள் இருந்ததாகக் கருதப்பட வேண்டும் என்பதற்காக, z இன் பெட்டியில் நகைகளை உள்நோக்கத்துடன் வைக்கிறார் மற்றும் இந்த சூழ்நிலை, z ஐக் திருட்டு குற்றத்திற்கு தண்டிக்கப்பட செய்யலாம்.A பொய்ச் சாட்சியத்தைப் புனைந்திருக்கின்றார். (b )B என்பவர், ஒரு நீதிபரிபாலன நீதிமன்றத்தில் ஒரு உறுதியூட்டுச் சாட்சியமாகப் பயன்படுத்த எண்ணி அவருடைய கடைப் புத்தகத்தில் ஒரு பொய்யான குறிப்பை உண்டாக்குகிறார்.A பொய் சாட்சியத்தைப் புனைந்திருக்கின்றார். (c )z என்பவர் குற்றமுறு சதி குற்றத்திற்குத் தண்டிக்கப்பட வேண்டுமன்ற உள்நோக்கத்தில், z இன் கையெழுத்தில் இருப்பதைப் போன்ற ஒரு கடிதத்தை அக்குற்றமுறு சதியில் z இன் சகா குற்றவாளிக்கு அனுப்பியத்தைப்போன்று செய்து அக்கடிதத்தை காவல்துறை சோதனை செய்யக் கூடுமென்று அவருக்கு தெரிந்த இடத்தில் வைக்கிறார்.A பொய் சாட்சியத்தைப் புனைந்திருக்கின்றார். IPC-193\nஎவரேனும், ஒரு நீதிமன்றச் செயல் நடவடிக்கையின் எந்தஒரு நிலையிலும், பொய் சாட்சியத்தை உள்நோக்கத்துடன் அளித்தால், அல்லது நீதிமன்ற செயல் நடவடிக்கையின் எந்தவொரு நிலையிலும் பயன்படுத்தப்படும் நோக்கத்திற்காக, பொய்யான சாட்சியத்தை புனைந்தால், ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும்; மற்றும் ஏதாவதொரு பிற நேர்வில் உள்நோக்கத்துடன் பொய் சாட்சியத்தை அளித்தால் அல்லது புனைந்தால், மூன்று வருடங்கள் வரை நீடிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபராததிற்கு உள்ளாக்கப் படவும் வேண்டும். விளக்கம் 1:-ஓர் ராணுவ நீதிமன்றத்தின் முன்னிலையான ஒரு விசாரணையும் ஒரு நீதிமன்ற செயல் நடவடிக்கையாகும். விளக்கம் 2:- ஒரு நீதிபரிபாலன நீதிமன்றத்தின் முன்பான ஒரு செயல் நடவடிக்கையில் சட்டத்தின் வழிகாட்டுதலின்படிச் செய்யப்படும் ஒரு முதற்கட்டப் புலன்விசாரணை, அப்புலன்விசாரணை ஒரு நீதிபரிபாலன நீதிமன்றத்தின் முன்னிலையில் நடைபெறாவிட்டாலும் அதுவும் ஒரு நீதிமன்ற செயல் நடவடிக்கையின் ஒரு நிலைதான். எடுத்துக்காட்டு z என்பவர் நீதிமன்ற விசாரணைக்கு பணிந்து மேலனுப்பப்பட வேண்டுமா என்பதை முடிவு செய்யப்படுவதற்கு, A என்பவர் பொய்யானது என்று அவருக்குத் தெரிந்த ஒரு வாக்குமூலத்தை சத்திய பிரமாணத்தின் பேரில், ஒரு குற்றவியல் நடுவர் முன்னிலையில் நடைபெறும் ஒரு விசாரணையில் அளிக்கிறார்.இந்த விசாரணை ஒரு நீதிமன்ற செயல் நடவடிக்கையின் ஒரு பகுதியாதலால், A பொய் சாட்சியம் அளித்திருக்கின்றார். விளக்கம் 3:-ஒரு நீதிபரிபாலன நீதிமன்றம் சட்டப்படி செய்யப் பணிந்த ஒரு புலன்விசாரணை, மற்றும் ஒரு நீதிபரிபாலன நீதிமன்றத்தின் அதிகாரத்தின்படி செய்யப்பட்ட அப்புலன்விசாரணை ஒரு நீதிபரிபாலன நீதிமன்றத்தின் முன்னிலையில் செய்யப்படாவிட்டாலும், அதுவும் ஒரு நீதிமன்றச் செயல் நடவடிக்கையின் ஒரு நிலைதான். எடுத்துக்காட்டு நிலத்தின் எல்லைகளை கண்டறிவதற்கான ஏதாவதொரு விசாரணையில், ஒரு நீதிபரிபாலன நீதிமன்றத்தின் சார்பாக அனுப்பப்பட்ட ஓர் அலுவலர் முன்னிலையில் A என்பவர் சத்தியப் பிரமாணத்தின்பேரில், பொய்யானதெனத் தெரிந்தே ஒரு வாக்குமூலத்தை அளிக்கிறார்.இவ்விசாரணை, ஒரு நீதிமன்ற செயல் நடவடிக்கையின் ஓர் அங்கமாக இருப்பதால், A பொய் சாட்சியம் அளித்திருக்கின்றார். IPC-194\nஎவரேனும் இந்தியாவில் தற்போது அமலிலுள்ள சட்டத்தின்படி மரண தண்டனையுடன் கூடிய ஒரு குற்றத்தில் யாரேனும் ஒரு நபர் தண்டிக்கப்படசெய்யும் உள்நோக்கத்தில் அல்லது அச்செயலால் அந்நபர் அநேகமாகத் தண்டிக்கப்பட்டுவிடக்கூடும் என்று தெரிந்தே, பொய்சாட்சியத்தைக் கொடுத்தால் அல்லது புனைந்தால், ஆயுள் சிறைத்தண்டனையுடன் அல்லது பத்து வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான கடுங்காவல் சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். அதன்பேரில் நிரபராதி நபர் தண்டிக்கப்பட்டு மரணதண்டனைநிறைவேற்றப்பட்டிருந்தால்:- மற்றும் அத்தகைய பொய் சாட்சியத்தின் விளைவாக, ஒரு நிரபராதி நபர் தண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தால், அத்தகைய பொய் சாட்சியம் அளித்த நபர், மரண தண்டனையுடனால் அல்லது இதற்குமுன்பு விவரிக்கப்பட்ட தண்டனையுடனால் தண்டிக்கப்பட வேண்டும். IPC-195\nஎவரேனும் இந்தியாவில் தற்போது அமலில் இருக்கும் சட்டத்தின்படி மரண தண்டனை, விதிக்கபட முடியாத, ஆனால் ஆயுள் சிறைத்தண்டனையால் அல்லது ஏழு வருடங்கள் அல்லது அதற்கும் மேலாக நீட்டிக்கப்படக்கூடிய சிறைத்தண்டனைக்குரிய ஒரு குற்றத்தில் யாரேனும் ஒரு நபரை தண்டிக்கப்படச் செய்வதற்காக உள்நோக்கத்தில் அல்லது அநேகமாக அவ்வாறு செய்யப்படலாமென்று தெரிந்தே, பொய் சாட்சியத்தைக் கொடுத்தால் அல்லது புனைந்தால் அக்குற்றத்தில் தண்டிக்கப்பட்ட ஒரு நபருக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டதோ, அதே தண்டனை வழங்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டு A என்பவர், z என்பவரை ஒரு கூட்டுக் கொள்ளை புரிந்த குற்றத்திற்கு தண்டனையடையச் செய்ய வேண்டுமென்ற உள்நோக்கத்தில் ஒரு நீதிபரிபாலன நீதிமன்றத்தின் முன்பு பொய்யான சாட்சியம் அளிக்கிறார்.ஆயுள் சிறைத்தண்டனை அல்லது அபராததுடன் கூடிய அல்லது அபராதமில்லாத, பத்து வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான கடுங்காவல் சிறைத்தண்டனைதான் கூட்டுக் கொள்ளை புரிவதற்கான தண்டனையாகும்.எனவே A ஆயுள் சிறைத்தண்டனைக்கு அல்லது அபராதத்துடன், அல்லது அபராதமில்லாமல் கூடிய சிறைத் தண்டனைக்கு உள்ளாகுதல் வேண்டும். IPC-196\nஎவரேனும், பொய்யானது அல்லது புனையப்பட்டது என்று அவர் அறிந்த ஏதாவதொரு சாட்சியத்தை, உண்மையானது அல்லது மெய்யானதுபோன்று நேர்மையின்றி பயன்படுத்தினால் அல்லது பயன்படுத்த முயன்றால், அவர் பொய்சாட்சியத்தை அளித்தது அல்லது புனைந்தது போலவே அதே முறையில் தண்டிக்கப்பட வேண்டும். IPC-197\nஎவரேனும், சட்டப்படி அளிக்க அல்லது கையொப்பமிடத் தேவையுள்ள ஏதாவதொரு சான்றிதழை, அல்லது ஏதாவதொரு பொருண்மை பற்றிய அத்தகைய சான்றிதழ் சட்டப்படி சாட்சியமாக ஏற்றுக்கொள்ளப்படும்போது, அத்தகைய சான்றிதழ் முக்கியமான பொருளின் காரணமாக அது பொய்யானது என தெரிந்தோ அல்லது நம்பியோ, அளித்தால் அல்லது கையொப்பமிட்டால், அவர் பொய் சாட்சியம் அளித்தது போலவே அதே முறையில் தண்டிக்கப்பட வேண்டும். IPC-198\nஎவரேனும், அதன் முக்கிய பொருளின்படி பொய்யானதெனத் தெரிந்த அத்தகைய சான்றிதழை, ஒரு உண்மையான சான்றிதழ் என நேர்மையற்ற முறையில் பயன்படுத்தினால் அல்லது பயன்படுத்த முயன்றால், அவர் பொய்சாட்சியம் அளித்தது போலவே அதே முறையில் தண்டிக்கப்பட வேண்டும். IPC-199\nஎவரேனும், ஏதாவதொரு நீதிபரிபாலன நீதிமன்றம் அல்லது யாரேனும் ஒரு பொதுப் பணியாளர் அல்லது பிறநபர், ஏதாவதொரு பொருண்மை சம்பந்தமாக சாட்சியத்தைப் பெற சட்டப்படி கடமைப்பட்டிருக்கும்போது அல்லது அதிகாரம் கொண்டிருக்கும்போது அவர் அளித்த அல்லது அடிக்கையொப்பமிட்ட ஏதாவதொரு சாற்றுரையில் ஏதாவதொரு பொய்யான வாக்குமூலத்தை அளித்தால் மற்றும் அளிக்கப்பட்ட அல்லது பயன்படுத்தப்பட்ட சாற்றுரையின் முக்கிய நோக்கத்தின் ஏதாவதொரு பொருள் பொய்யென அவருக்குத் தெரிந்தோ அல்லது நம்பியோ அல்லது உண்மையானதென நம்பாமலோ அளித்தால் அவர் பொய்சாட்சியம் அளித்ததுபோலவே, அதே முறையில் தண்டிக்கப்பட வேண்டும். IPC-200\nஎவரேனும், ஏதாவதொரு அத்தகைய சாற்றுரையை அதன் முக்கிய பொருளில் பொய்யாகயிருக்கின்றது எனத் தெரிந்தே, உண்மையானது போன்று நேர்மையற்ற முறையில் பயன்படுத்தினால் அல்லது பயன்படுத்த முயன்றால், அவர் பொய்சாட்சியம் அளித்ததுபோலவே அதே முறையில் தண்டிக்கப்பட வேண்டும். விளக்கம்:-ஒரு சாற்றுரையை சில ஒழுங்குமுறைப்படி இல்லை என்ற காரணத்தாலேயே மட்டும் அது ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லாவிட்டாலும் அதுவும் சட்டப்பிரிவுகள் 199 மற்றும் 200 ஆகியனவற்றின் பொருளின்படி ஒரு சாற்றுரைதான்.

Popular posts from this blog

Tamil BNS Privacy Policy

Privacy Policy

பேராசை பெரு நஷ்டம்.