இந்திய தண்டனை சட்டம் பிரிவு 161-180

IPC-161\nபொது ஊழியருக்கு அரசு ஊதியம் கொடுக்கின்றது. ஒரு கடமையை மாற்றுவதற்காக அல்லது சலுகையை காட்டுவதற்காக அல்லது உதவி செய்வதற்காக அல்லது உபத்திரவம் தருவதற்காக அவர்கள் பிறரிடமிருந்து எத்தகைய ஊதியமும் அல்லது இலாபமும் லஞ்சமாக பெறக்கூடாது. அப்படி பெறுவது குற்றமாகும். பொது ஊழியர் என்ற சொல் மத்திய அரசில் பணிபுரிவோர், மாநில அரசில் பணிபுரிவோர், உள்ளாட்சித் துறையில் அல்லது அரசாங்க நிறுவனங்களில் பணி புரிவோர் ஆகிய அனைவரையும் குறிக்கும் (21 IPC பிரிவை பார்க்கவும்). பொது ஊழியராக பணிபுரியும் நிலையை எதிநோக்கி உள்ளவர்கள் மேலே குறிப்பிட்டபடி ஊதியம் பெறுவதும் குற்றமாகும். இந்த குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். Explanation: பொது ஊழியராக பணிபுரியும் நிலையினை எதிநோக்கி உள்ளவர் என்று இங்கே குறிப்பிடுவது வேலைக்கு செல்லும் வாய்ப்பினை உறுதியாக எதிர்நோக்கி உள்ளவர்களை மட்டும் குறிக்கும். அப்படி இல்லாமல் தான் ஒரு பொது ஊழியர் ஆகும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறி பிறரை ஏமாற்றி இத்தகைய ஊழியத்தை பெறுவோரை மோசடி செய்த குற்றத்திற்காக தான் தண்டிக்க முடியும். இந்த பிரிவு இவர்களுக்கும் பொருந்தாது. -ஊதியம்- என்ற சொல் பண ஊதியத்தை மட்டுமல்லாமல் பண மதிப்புள்ள பண்டங்களையும் குறிக்கும். சட்டபூர்வமாக வாங்கும் சம்பளத்தையும் அரசாங்கத்திடமிருந்து ஒரு பொது ஊழியர் சட்டப்பூர்வமாக பெற தகுந்த எல்லா வகையான வரவுகளும் அடங்கும். ஒரு காரியத்தை செய்வதற்கும் செய்யாமல் இருப்பதற்கும் பெறுகின்ற லாபத்தையும் இந்த பிரிவு உள்ளடக்கும். ஒரு அலுவலகச் செயலின் பொருட்டு சட்டபூர்வ ஊதியம் அல்லாத பிற கையூட்டைப் பெறுகின்ற பொதுப் பணியாளர் [ஊழல் தடுப்பு சட்டம், 1988(49/1988)இன் சட்டப்பிரிவு 31இன் படி நீக்கப்பட்டது]. IPC-162\nஊழல் தடுப்பு சட்டம், 1988(49/1988)இன் சட்டப்பிரிவு 31இன் படி நீக்கப்பட்டது. IPC-163\nஊழல் தடுப்பு சட்டம், 1988(49/1988)இன் சட்டப்பிரிவு 31இன் படி நீக்கப்பட்டது IPC-164\nநீக்கப்பட்டது IPC-165\nஒரு பொதுஊழியர் மூலம் ஒருவருக்கு ஒரு காரியம் நடைபெற இருக்கிறது. இதனை அந்த பொது ஊழியர் அறிவார். இந்த நிலையில் அவர் அந்த நபரிடம் இருந்து விலை கொடுக்காமல் ஒரு விலை மதிப்புள்ள பொருளை பெறுவது குற்றமாகும். அந்த பண்டத்திற்கு உரிய விலையைவிட மிகவும் குறைந்த விலைக்கு அந்த பண்டத்தை பெறுவதும் குற்றம். அவர் அந்தப் பொருளை தனக்காக பெறுவதும் அல்லது தனக்கு வேண்டிய வேறு ஒருவருக்காக பெறுவதும் குற்றமாகும். தன்னுடைய மேலதிகாரியின் மூலம் ஒரு காரியம் அந்த நபருக்கு ஆகவேண்டிய நிலையில் அப்படி பெறுவது குற்றமாகும். மேற்கூறியவாறு அந்த பொருளை சம்பந்தப்பட்ட நபரிடம் இருந்து பெறாமல், அந்த நபருக்கு வேண்டியவர் அல்லது சொந்தக்காரரிடம் இருந்து அப்படிப் பெறுவதும் குற்றமாகும். இந்த குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். உதாரணம்: தாஸ் என்பவர் ஒரு நீதிபதி, அவருடைய நீதிமன்றத்தின் ராமன் என்பவருடைய வழக்கு நடைபெற்று வருகிறது. அங்கே அரசாங்க கடன் பத்திரம் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. தாஸ் என்ற நீதிபதி இந்த பிரிவின் கீழ் குற்றவாளியாய் ஆகின்றார். பொதுப் பணியாளரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அல்லது அலுவல் செயல்பாட்டில் சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து, அத்தகைய பொதுப் பணியாளர் மதிப்புள்ள பொருளை உரிய விலையின்றிப் பெறுதல் [ஊழல் தடுப்பு சட்டம், 1988(49/1988)இன் சட்டப்பிரிவு 31இன் படி நீக்கப்பட்டது IPC-166\nஒரு பொதுப் பணியாளராக இருக்கின்ற எவரேனும் அத்தகைய பொதுப் பணியாளர் என்ற முறையில், அவர் எந்த முறையில் அவரை நடத்திக்கொள்ள வேண்டுமோ, அந்த சட்டத்தின் ஏதாவதொரு கட்டளைக்கு தெரிந்தே கீழ்ப்படியாதிருந்து அத்தகைய கீழ்ப்படியாமையினால் யாரேனும் ஒரு நபருக்குத் தீங்கு விளைவிக்கும் உள்நோக்கத்தில், அல்லது அநேகமாக அவர் விளைவிப்பார் என தெரிந்தே விளைவித்தால், ஒரு வருடம் வரை நீட்டிக்கபடக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டு A என்ற அலுவலர், ஒரு நீதிபரிபாலன நீதிமன்றத்தால், Z என்பவருக்கு ஆதரவாக கூறப்பட்ட ஒரு தீர்ப்பாணையை நிறைவேற்றும் பொருட்டு, அந்நிறைவற்றலில் சொத்தை எடுப்பதற்கு சட்டத்தால் கட்டளையிடப்பட்டிருக்கும் போது, Z க்கு அவர் அநேகமாக தீங்கு விளைவிக்கலாம் என்ற தெரிதலுடன், சட்டத்தின் அந்த கட்டளைக்குத் தெரிந்தே கீழ்ப்படியாதிருக்கிறார்.இச்சட்டப்பிரிவில் பொருள் வரையறுக்கப்பட்டுள்ள குற்றத்தைA புரிந்திருக்கிறார். IPC-167\nஒரு பொதுப் பணியாளராக இருக்கின்ற எவரேனும், அத்தகைய பொதுப் பணியாளர் என்ற முறையில், ஏதாவதொரு ஆவணத்தை அல்லது மின்னணுப் பதிவைத் தயாரிக்க அல்லது மொழிமாற்றம் செய்ய பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கின்ற போது, அந்த ஆவணத்தை அல்லது மின்னணுப் பதிவை அது தவறானது என அவருக்குத் தெரிந்தோ அல்லது அவர் நம்பியோ, யாரேனும் ஒரு நபருக்குத் தீங்கு அதனால் அவர் அநேகமாக விளைவிக்கலாமென்ற உள்நோக்கத்தில் அல்லது அதனால் அவர் அநேகமாக விளைவிக்கலாமென்று தெரிந்தே வடிவமைத்தால், தயாரித்தால் அல்லது மொழிமாற்றம் செய்தால், மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கக்கூடிய ஒரு கால அளவிலான சிறைத் தண்டனையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-168\nஒரு பொதுப் பணியாளராக இருக்கின்ற எவரேனும், மற்றும் அத்தகைய பொதுப் பணியாளர் என்ற முறையில் வணிகத்தில் ஈடுபடக்கூடாது.என சட்ட விதிமுறைப் படி கடமைப்பட்டிருக்கும் போது, வணிகத்தில் ஈடுபட்டால், ஒரு வருடம் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-169\nஒரு பொதுப்பணியாளராக இருக்கும் எவரேனும், மற்றும் அத்தகைய பொதுப் பணியாளர் என்ற முறையில் குறிப்பிட்ட சொத்தை வாங்கக்கூடாது அல்லது ஏலத்தில் எடுக்கக்கூடாது என சட்டப்படி கடமைப்பட்டிருக்கும் போது, அச்சொத்தை அவரின் சொந்தப் பெயரிலோ அல்லது மற்றொருவரின் பெயரிலோ அல்லது கூட்டாகவோ அல்லது மற்றவர்களுடன் சேர்ந்து பங்குதாரராகவோ வாங்கினால் அல்லது ஏலத்தில் எடுத்தால், இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்; மற்றும் அச்சொத்து வாங்கப்பட்டிருந்தால், பறிமுதல் செய்யப்பட வேண்டும். IPC-170\nஒருவருக்கு எத்தகைய அரசாங்க பொறுப்பும் இல்லாத போது, தான் ஒரு பொது ஊழியராக பணிபுரிவதாக நடிப்பதும் குற்றமாகும். அப்படி பொறுப்பில் இல்லாத பொது பொறுப்பில் உள்ள ஒரு பொது ஊழியரைப் போல் ஆள் மாறாட்டம் செய்வதும் குற்றமாகும். இப்படி பொறுப்பில் இருப்பது போல நடித்து எத்தகைய காரியத்தை செய்தாலும் அல்லது செய்ய முயற்சித்தாலும் குற்றமாகும். இந்த குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். ஒரு பொதுப் பணியாளராக ஆள்மாறாட்டம் செய்தல் எவரேனும், ஒரு பொதுப்பணியாளராக ஏதாவதொரு குறிப்பிட்ட பணியைக் கொண்டிருப்பதாக, அத்தகைய பணியை அவர் கொண்டிருக்கவில்லை என தெரிந்தே, பாசாங்கு செய்தால் அல்லது அத்தகைய பணியைக் கொண்டிருக்கும் யாரேனும் ஒரு பிற நபரைப் போல் பொய்யாக ஆள்மாறாட்டம் செய்தால் மற்றும் அத்தகைய ஆள்மாறாட்ட பதவியின் உருவில், அத்தகைய பணித் தன்மையின் கீழ் ஏதாவதொரு செயலைச் செய்தால் அல்லது செய்வதற்கு முயன்றால், இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-171\nசில தரப்பட்ட பொது ஊழியர்கள் சீருடை அல்லது அடையாள சின்னங்கள் அணிய வேண்டும். ஆனால் அத்தகைய பொது ஊழியராக இல்லாதவர் யாரும் அந்த சீருடைகளை அணிவதும் அல்லது அடையாள சின்னங்களை வைத்திருப்பதும் குற்றமாகும். தான் பொது ஊழியர் என்று பிறரை நம்ப வைப்பதற்காக அத்தகைய சீருடைகளை அணிவதும் அடையாள சின்னங்களை வைத்திருப்பதும் குற்றமாகும். இந்த குற்றத்திற்காக மூன்று மாதங்கள் வரை சிறைக்காவல் அல்லது 200 ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். மோசடியான உள்நோக்கத்துடன், பொதுப் பணியாளரால் பயன்படுத்தப்படும் சீருடையை அணிதல் அல்லது அடையாள சின்னத்தை எடுத்துச் செல்லல் எவரேனும், பொதுப் பணியாளர்களின் ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்திராதபோது, பொதுப் பணியாளர்களின் அந்தப் பிரிவு பயன்படுத்தும் ஏதாவதொரு சீருடை அல்லது அடையாள சின்னத்தைப்போன்று தோற்றமளிக்கிறதை, பொதுப் பணியாளர்களின் அந்தப் பிரிவை அவர் சேர்ந்தவர் என அது நம்பப்படும் என்ற உள்நோக்கத்துடன், அல்லது அது அநேகமாக நம்பப்படும் என்ற தெரிதலுடன் ஏதாவதொரு சீருடையை அணிந்தால் அல்லது அடையாள சின்னத்தை எடுத்துச் சென்றால் மூன்று மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன் அல்லது ரூபாய் இருநூறு வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-172\nஎவரேனும், பொதுப் பணியாளர் என்ற முறையில் சட்டப்பூர்வமாக, ஒரு அழைப்பாணை, அறிவிக்கை அல்லது உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் கொண்ட யாரேனும் ஒரு பொதுப் பணியாளர் பிறப்பிக்கும் அத்தகைய அழைப்பாணை, அறிவிக்கை அல்லது உத்தரவு ஆகிய ஏதாவதொன்றை தன்னிடம் சார்பு செய்யப்படுவதைத் தவிர்க்க தலைமறைவானால், ஒரு மாதம் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான சாதாரண சிறைத்தண்டனையுடன் அல்லது ஐநூறு ரூபாய் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். அல்லது, அழைப்பாணை அல்லது அறிவிக்கை அல்லது உத்தரவு, ஒரு நீதிபரிபாலன நீதிமன்றத்தில் அவர் நேரடியாகவோ அல்லது அவரது முகவர் மூலமாகவோ முன்னிலையாக வேண்டுமென்றோ அல்லது ஒரு ஆவணத்தையோ அல்லது மின்னணுப் பதிவையோ முன்னிலைப்படுத்தவேண்டுமென்றோ இருந்தால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கபடக்கூடிய ஒரு கால அளவிலான சாதாரண சிறைத்தண்டனையுடன் அல்லது ரூபாய் ஆயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-173\nஎவரேனும், யாரேனும் ஒரு பொதுப் பணியாளர் என்ற முறையில் ஏதாவதொரு அழைப்பாணை, அறிவிக்கை அல்லது உத்தரவைப் பிறப்பிக்க அதிகாரம் கொண்டு பிறப்பிக்கும் அத்தகைய அழைப்பாணை, அறிவிக்கை அல்லது உத்தரவை தன்னிடமோ அல்லது யாரேனும் ஒரு பிற நபரிடமோ சார்பு செய்யப்படுவதை ஏதாவதொரு முறையில் உள்நோக்கத்துடன் தடுத்தால், அல்லது அத்தகைய அழைப்பாணை, அறிவிக்கை அல்லது உத்தரவை ஏதாவதொரு இடத்தில் சட்டப்படியாக ஒட்டப்படுவதை உள்நோக்கத்துடன் தடுத்தால், அல்லது ஏதாவதொரு இடத்தில் சட்டப்படி ஒட்டப் பட்டிருக்கின்ற ஏதாவதொரு அத்தகைய அழைப்பாணை, அறிவிக்கை அல்லது உத்தரவை உள்நோக்கத்துடன் அகற்றினால், அல்லது யாரேனும் ஒரு பொதுப் பணியாளர் என்ற முறையில், ஏதாவதொரு பொது அறிவிப்பை வெளியிட சட்டப்படி அதிகாரம் படைத்த அத்தகைய பொதுப் பணியாளரால் கட்டளையிடப்படும் அத்தகைய பொது அறிவிப்பு சட்டப்படி வெளியிடப்படுவதை உள்நோக்கத்துடன் தடுத்தால், ஒரு மாதம் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான சாதாரண சிறைத்தண்டனையுடன் அல்லது ரூபாய் ஐநூறு வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். அல்லது, அவ்வழைப்பாணை, அறிவிக்கை, உத்தரவு அல்லது பொது அறிவிப்பு ஒரு நீதிபரிபாலன நீதிமன்றத்தில், தானோ அல்லது முகவர் மூலமாக முன்னிலையாவதற்கோ அல்லது ஒரு ஆவணம் அல்லது மின்னணுப் பதிவை ஒப்படைப்பதற்கோ இருந்தால் ஆறுமாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான சாதாரணச் சிறைத்தண்டணையுடன் அல்லது ஆயிரம் ரூபாய் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-174\nஎவரேனும், யாரேனும் ஒரு பொதுப் பணியாளர் என்ற முறையில், ஒரு அழைப்பாணை, அறிவிப்பு, உத்தரவு அல்லது பொது அறிவிப்பு ஆகியவற்றை வெளியிட, சட்டப் படி அதிகாரம் கொண்ட அத்தகைய பொதுப் பணியாளர் பிறப்பிக்கும் அவற்றிற்குக் கீழ்ப்படிந்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில், தான் நேரடியாகவோ அல்லது ஒரு முகவர் மூலமாகவோ முன்னிலையாக சட்டப்படி கடப்பாடு கொண்டிருக்கையில், உள்ளநோக்கத்துடன் அவ்விடத்தில் அல்லது அந்நேரத்தில் ஆஜராகத் தவறினால் அல்லது ஆஜராக கடப்பாடு கொண்ட அவ்விடத்திலிருந்து சட்டப் படி வெளியேற வேண்டிய நேரத்திற்கு முன்பாகவே வெளியேறினால், ஓரு மாதம் வரை நீட்டிக்கக் படக்கூடிய ஒரு கால அளவிலான சாதாரணச் சிறைத்தண்டணையுடன் அல்லது ஐநூறு ரூபாய் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். அல்லது அவ்வழைப்பாணை, அறிவிக்கை, உத்தரவு அல்லது பொது அறிவிப்பு, ஒரு நீதிபரிபாலன நீதிமன்றத்தில், தான் நேரடியாகவோ அல்லது முகவர் மூலமாகவோ ஆஜராவதற்காக இருந்தால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான சாதாரணச் சிறைத்தண்டணையுடன் அல்லது ஆயிரம் ரூபாய் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டுகள் (a ).கொல்கத்தா உயர்நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட நீதிப்பேராண்மைக்குக் கீழ்ப்படிந்து, அந்நீதிமன்றம் முன்பு முன்னிலையாக சட்டப்படி கடமை கொண்டுள்ள A என்பவர் உள்நோக்கத்துடன் அவ்வாறு முன்னிலையாகத் தவறுகிறார்.இச்சட்டப் பிரிவில் வரையறுக்கப்பட்டுள்ள குற்றத்தைப் புரிந்தவராகிறார். (b ).ஒரு மாவட்ட நீதிபதி பிறப்பித்த அழைப்பாணையின்படி அதற்கு கீழ்ப்படிந்து, ஒரு சாட்சியாக அந்த மாவட்டநீதிபதி முன்பு முன்னிலையாகக் கடமைப்பட்ட A என்பவர் உள்நோக்கத்துடன், அவ்வாறு முன்னிலையாகத் தவறுகிறார்.இச்சட்டப் பிரிவின்படி வரையறுக்கப்பட்டுள்ள குற்றத்தை A புரிந்தவராகின்றார். IPC-175\nஎவரேனும், யாரேனும் ஒரு பொதுப் பணியாளரிடம், அவர் பொதுப் பணியாளர் என்ற முறையில், ஏதாவதொரு ஆவணத்தை அல்லது மின்னணுப் பதிவை தர அல்லது ஒப்படைக்க சட்டப்படி கடப்பாடு கொண்ட உள்நோக்கத்துடன் அதை அவ்வாறு தர அல்லது ஒப்படைக்கத் தவறினால், ஒரு மாதம் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான சாதாரண சிறைத்தண்டணையுடன் அல்லது ரூபாய் ஐநூறு வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். அல்லது அந்த ஆவணம் அல்லது மின்னணுப்பதிவு ஒரு நீதிபரிபாலன நீதிமன்றத்தில் தர அல்லது ஒப்படைக்க வேண்டியதாயிருந்தால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான சாதாரண சிறைத்தண்டணையுடன் அல்லது ரூபாய் ஆயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டு A என்பவர் ஒரு மாவட்ட நீதிமன்றம் முன்பு, ஒரு ஆவணத்தை ஒப்படைக்க சட்டப்படி கடமைப்பட்டிருந்தும், அதை ஒப்படைக்க தவறுகிறார்.A இச்சட்டப்பிரிவில் வரையறுக்கப்பட்டுள்ள குற்றத்தைப் புரிந்திருக்கிறார். IPC-176\nஎவரேனும், யாரேனும் ஒரு பொதுப்பணியாளரிடம், அவர் பொதுப் பணியாளர் என்ற முறையில், ஏதாவது பொருள் குறித்து சட்டத்தால் கோரப்படும் முறையிலும் மற்றும் நேரத்திலும், ஏதாவதொரு அறிவிக்கையைக் கொடுக்க அல்லது அத்தகைய தகவலை அளிக்கத் தவறினால், ஒரு மாதம் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான சாதாரண சிறைத்தண்டணையுடன் அல்லது ரூபாய் ஐநூறு வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். அல்லது தர கோரப்பட்ட அறிவிக்கை அல்லது தகவல் ஒரு குற்றம் புரியப்பட்டதன் பொருட்டு அல்லது ஒரு குற்றம் புரியப்படுவதைத் தடுக்கும் நோக்கத்திற்கு தேவைப்படுவதாக அல்லது ஒரு குற்றவாளியைக் கைது செய்வதன் பொருட்டு இருந்தால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான சாதாரண சிறைத்தண்டணையுடன் அல்லது ரூபாய் ஆயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன்; அல்லது தர கோரிக்கை அறிவிக்கை அல்லது தகவல், குற்ற விசாரணை முறைச் சட்டம், 1898 (5/1898)இன் சட்டப்பிரிவு 565 உட்பிரிவு (1)இன் கீழ் பிறப்பிக்கப்பட்ட ஒரு உத்தரவினால் கோரப்பட்டிருந்தால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான சாதாரண சிறைத்தண்டணையுடன் அல்லது ரூபாய் ஆயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன்; IPC-177\nஎவரேனும், யாரேனும் ஒரு பொதுப் பணியாளரிடம் அவர் பொதுப் பணியாளர் என்ற முறையில், ஏதாவதொரு பொருளில் தகவலை அளிக்க கடமைப்பட்டுள்ளபோது, அப்பொருளின் மீதான தகவல் பொய்யானது என தெரிந்தே அல்லது அவ்வாறு நம்புவதற்கு காரணமிருக்கும்போது, உண்மையானது போன்று அளித்தால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான சாதாரண சிறைத்தண்டணையுடன் அல்லது ரூபாய் ஆயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். அல்லது, சட்டப்படி கடமைப்பட்டு அளிக்கப்பட வேண்டிய அத்தகவல், ஒரு குற்றம் புரியப்பட்டதன் பொருட்டு அல்லது ஒரு குற்றம் புரியப்படுவதைத் தடுக்கும் நோக்கத்திற்கு தேவைப்படுவதாக, அல்லது ஒரு குற்றவாளியைக் கைது செய்வதன் பொருட்டு இருந்தால் இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான சாதாரண சிறைத்தண்டணையுடன் அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன், எடுத்துக்காட்டுகள் (a )ஒரு நிலத்தின் சொந்தக்காரரான A என்பவர், அச் சொத்தின் எல்லைக்குள், ஒரு கொலை புரியப்பட்டிருக்கின்றது என தெரிந்தும், ஒரு பாம்பு கடித்த விபத்தின் விளைவாக அந்த மரணமானது ஏற்பட்டிருக்கின்றதென்று, மாவட்ட நீதிபதியிடம் வேண்டுமென்றே பொய்யான தகவல் தருகிறார்.A, இச்சட்டப்பிரிவில் வரையறுக்கப்பட்டுள்ள குற்றத்தைப் புரிந்த குற்றவாளியாகிறார். (b ).குறிப்பிட்ட அளவிலான புதிய வெளிநபர்களின் குழு ஓன்று பக்கத்திலுள்ள ஒரு இடத்தில் வசிக்கும் z என்ற ஒரு பணக்கார வணிகரிடம் கூட்டுக்கொள்ளையடிப்பதற்காக, தனது கிராமம் வழியாகக் கடந்து சென்றிருக்கின்றது என்பதுA என்ற அக்கிராமக் காவலாளிக்கு தெரிந்திருந்தும், மற்றும் அத்தகைய பொருண்மைத் தகவலை, உடனடியாகவும் சரியான நேரத்திற்குள்ளும் மிக அருகிலுள்ள காவல் நிலையத்தின் அலுவலருக்கு, வங்காளத் தொகுப்புச் சட்டம் ஒழுங்குமுறை III, 1821 இன் சட்ட பிரிவு VII துணைப்பிரிவு 5இன் கீழ் தெரிவிக்க அவர் கடமைப்பட்டிருக்கும் போது, சந்தேகப்படும்படித் தோன்றும் ஒரு குழுவான நபர்கள், வேறு ஒரு திசையில் உள்ள குறிப்பிட்ட தூரப்பகுதியிலுள்ள ஒரு இடத்தில் கூட்டுகொள்ளையடிக்க, தனது கிராமத்தைக் கடந்து சென்றதாக, அந்தக் காவல் அலுவலரிடம் வேண்டுமென்றே தவறானத் தகவலைத் தருகின்றார்.இங்கு A, இச் சட்டப்பிரிவின் பிந்தைய பகுதியில் வரையறுத்து குறிப்பிட்டுக் கூறப்பட்டுள்ள குற்றத்தைப் புரிந்த குற்றவாளியாகிறார். விளக்கம்:-சட்டப் பிரிவு 176 மற்றும் இச்சட்டப் பிரிவிலும், "குற்றம்"என்ற வார்த்தையானது, இந்தியாவில் ஒரு செயல், சட்டப் பிரிவுகள் 302, 304, 382, 392, 393, 394, 395, 396, 397, 398, 399, 402, 435, 436, 449, 450, 457, 458, 459 மற்றும் 460 ஆகிய ஏதாவதொன்றின் கீழ் புரியப்பட்டால் எப்படி குற்றமாகுமோ அதேபோல் இந்தியாவிற்கு வெளியே புரியப்பட்ட அத்தகைய ஒரு செயலும் குற்றமாகும் என்பதையும் உள்ளடக்குகிறது, மற்றும் "குற்றம் புரிந்தவர்"என்ற வார்த்தையானது, ஏதாவதொரு அத்தகைய செயலுக்கு குற்றவாளி என குற்றஞ்சாட்டப்படும் யாரேனும் ஒரு நபரை உள்ளடக்குகிறது. IPC-178\nஎவரேனும் சட்டப்படி அதிகாரம் கொண்ட ஒரு பொதுப் பணியாளரால், உண்மையைக் கூற ஒருவர் தன்னை ஆட்படுத்திக்கொள்ள வேண்டுமென பணிக்கப்படும்போது, உண்மையைக் கூற, ஒரு சத்தியப் பிரமாணம் அல்லது உறுதிமொழிக்குத் தன்னை ஆட்படுத்திக்கொள்ள வேண்டுமென்பதை மறுத்தால் ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான சாதாரண சிறைத்தண்டணையுடன் அல்லது ரூபாய் ஆயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-179\nஎவரேனும், யாரேனும் ஒரு பொதுப்பணியாளரிடம், ஏதாவதொரு பொருள் குறித்து உண்மையைக் கூற சட்டப்படி கடமைப்பட்டுள்ளபோது அத்தகைய பொதுப் பணியாளர் தான் பொதுப் பணியாளர் என்ற முறையில், அத்தகைய பொதுப்பணியாளரின் சட்டப் படியான அதிகாரங்களைப் பயன்படுத்தும்போது அப்பொருளைச் சார்ந்த, அவரிடம் கட்டாயப்படுத்தப்பட்ட ஏதாவதொரு கேள்விக்குப் பதிலளிக்க மறுத்தால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான சாதாரண சிறைத்தண்டணையுடன் அல்லது ரூபாய் ஆயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-180\nஎவரேனும் ஏதாவதொரு வாக்குமூலத்தில் ஒருவரை கையொப்பமிடப் பணிக்க சட்டப்படி அதிகாரம் கொண்ட தகுதிவாய்ந்த ஒரு பொதுப்பணியாளரால், அவ்வாக்குமூலத்தில் கையொப்பமிடப் பணிக்கப்படும்போது, தன்னால் கொடுக்கப்பட்ட ஏதாவதொரு வாக்குமூலத்தில் அவர் கையொப்பமிட மறுத்தால், மூன்று மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான சாதாரண சிறைத்தண்டணையுடன் அல்லது ரூபாய் ஐநூறு வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.

Popular posts from this blog

Tamil BNS Privacy Policy

Privacy Policy

பேராசை பெரு நஷ்டம்.