பொன்னேரி என்ற ஊரில், மணி என்கின்ற மன்னர் வாழ்த்து வந்தார். பெரும் பணக்காரர்; நல்ல மனம் படைத்த அவருக்கு, ஒரு உதவியாளர் தேவை என்று அறிவிக்கப்பட்டது.


மூன்று பேர், வேலை கேட்டு, வந்தனர்; முதலில் வந்தவன், தங்கராஜ்; வாட்ட சாட்டமான தோற்றம்.

''நான் படித்தவன்; நல்ல வசதியுள்ள குடும்பத்தில் பிறந்தவன்; ஆயினும், என் சொந்தக் கால்களில் நிற்க ஆசைப்பட்டு, வேலை கேட்டு வந்திருக்கிறேன்...'' என்று, பணிவாகக் கூறினான்.

''நீ என்னிடம் வேலை செய்ய விரும்பினால், சமையல் கலையைக் கற்று வா...'' என்றார்.

''காரியதரிசியாக வேலை செய்யலாம் என்று வந்துள்ளேன்; ஆனால், சமையல் கற்றுக் கொள்ள சொல்கிறீர்கள்; இது, எனக்கு குழப்பமாக இருக்கிறது...''

''நீ என்னிடம் எல்லா விதமான வேலைகளையும் செய்யத் தயாரக இருக்க வேண்டும்; வீட்டில் இருக்கும் போது, மனைவி சமைப்பாள்; வெளியிடத்திற்குப் போகும் போது, என் உணவுத் தேவைகளை, நீ தான் கவனித்துக் கொள்ள வேண்டும்...'' என்று, கூறினார் கதிரவன்.

''மன்னிக்க வேண்டும் ஐயா... நான், உங்களிடம் எதிர்பார்த்த வேலை இதுவல்ல...'' என்று கூறி, புறப்பட்டான்.

அடுத்தவன், சுரேஷ்; இவனும் இளைஞன்; நல்ல எடுப்பான தோற்றம்; சுறு சுறுப்பு முகத்தில் தெரிந்தது.

''ஐயா... நான் படித்தவன்; எந்த ஒரு கடினமான வேலையைக் கொடுத்தாலும், எளிதாகச் செய்து விடுவேன்; எத்தனையோ செல்வந்தர்கள் என்னை வேலைக்கு அழைத்தனர்; ஆனால், நான் உங்களிடம் வேலை செய்ய விரும்புகிறேன்...'' என்று, கூறினான்.

''உனக்கு சமைக்கத் தெரியுமா...'' என்று, கேட்டார், பணக்காரர்.

''எனக்கு மிகவும் நன்றாகச் சமைக்கத் தெரியும்...''

''சரி... பிரியாணி எப்படிச் செய்வது என்று சொல் பார்ப்போம்...''

''அது வந்து... வந்து... நான் தனியாகச் செய்ததில்லை; ஆனால், சமாளிச்சுக்குவேன்...'' என்று கூறினான்.

''இங்க பார் தம்பி... தெரியும்னா தெரியும்ன்னு சொல்லு... என்னிடம் பொய் சொல்லாதே...'' என்றார், பணக்காரர்.

''வேலை கிடைக்கணும்கிற ஆசையிலே, பொய் சொன்னேன்...''

''பொய் சொல்பவர்கள், என் காரியதரிசி வேலைக்குச் சரி வர மாட்டார்கள்...'' என்று கூறி, அனுப்பி விட்டார், பணக்காரர்.

மூன்றாவதாக ஒருவன் வந்தான்.

''ஐயா... நான் ஒரு ஏழை! ஆனால், நான் வேலை செய்யும் இடங்களில், நன்றாக வேலை செய்தால், நிறைய வேலை கொடுத்து விடுவார்களோ என்று எண்ணி, எங்கேயும், ஒழுங்காக வேலை செய்ததில்லை; அதனால், பலமுறை வேலையிலிருந்து நீக்கப்பட்டேன்; என் அண்ணனும், அண்ணியும் உதவாக்கரையான என்னை, வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர்; பல இடங்களில் வேலை தேடியும், முந்தைய நடவடிக்கைகளால், எனக்கு வேலைத் தர யாரும் தயாராக இல்லை...

''இறுதியில் சலிப்படைந்த நான், திருட்டுத் தொழிலில் ஈடுபட்டுச் சிறை சென்றேன்; அங்கிருந்த நாட்களில், என் கடந்த காலத்தை எண்ணி வருந்தினேன்; இனியாவது, ஒழுங்காக வேலை செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்து, சிறையில் நன்றாகச் சமையல் வேலை செய்தேன்.

''நன்னடத்தைக்காக, சீக்கிரம் என்னை விடுதலை செய்து விட்டனர்; ஆனால், சிறைக்குச் சென்றவனை, வேலையில் வைத்துக் கொள்ள எவரும் தயாராக இல்லை. இப்போது முற்றிலும் திருந்திய நான், இனி, ஒழுங்காக வேலை செய்வேன். தாங்கள் எனக்கு ஒரு வேலை கொடுங்கள்...'' என்று கெஞ்சினான், அந்தப் பரம ஏழை.

''உனக்குச் சமையல் தெரியுமா...'' என்று கேட்டார், பணக்காரர்.

''நன்றாகச் சமையல் செய்வேன்; சிறைச்சாலையில் இருந்த போது, சமையல் நன்றாகக் கற்றுக் கொண்டேன்...'' என்று கூறினான் ஏழை.

கதிரவனின் உத்தரவுக்கு ஏற்ப, சிறிது நேரத்தில் சுவைமிக்க பிரியாணி சமைத்து, அவர் முன் வைத்தான்.

பிரியாணியை சுவைத்த பணக்காரர், தன் உள்ளத்தைப் பறி கொடுத்து, அவனையே உதவியாளராகத் தேர்வு செய்தார்.

இந்த செய்தியை அறிந்த பணக்காரரின் மனைவி, கணவர் மீது எரிச்சலடைந்தாள்.

''ஐயோ... உங்களுக்குகென்ன புத்தி கெட்டுப் போச்சா... போயும் போயும் ஒரு திருடனுக்கு வேலை கொடுத்திருக்கிறீர்களே...'' என்றாள்.

''அவன், என்னிடம் எதையும் மறைக்கவில்லை; உண்மையை மட்டுமே பேசினான். தன்னுடைய தவறுகளை ஒப்புக் கொண்டு, இனி அப்படி செய்ய மாட்டேன் என்று உறுதி அளித்தான். அதை மெச்சுகிறேன்; அவன் சொற்படியே நாணயமாக இருப்பான் என்பதில், எனக்கு நம்பிக்கை உண்டு.

''இவ்வாறு திருந்திய மனிதர்களுக்கு வாய்ப்புத் தர வேண்டும்; அப்படி நாம் தராத போது தான், மீண்டும் திருடுவதற்குச் சென்று விடுவர். நாமே, ஒரு திருடனை உருவாக்க கூடாது; திருடர்களை உருவாக்காதீர்கள் என்பதே, மற்றவர்களுக்கு நாம் கற்றுக் கொடுக்கும் பாடமாக இருக்க வேண்டும்...'' என்றார்.

கணவன் கூறியது நியாயம் என்று தோன்றியது. எனவே, அவனை வேலையில் சேர்த்துக் கொள்ள சம்மதித்தாள்.

பணக்காரரது வீட்டில், சமையல்காரனாக புது வாழ்வைத் துவங்கி, மிக குறுகிய காலத்திலேயே, அவ்வீட்டில் இருந்தவர்களின் உள்ளத்தில் இடம் பிடித்தான் ஏழை. பின், பணக்காரரின் காரியதரிசி என்ற பதவி உயர்வை பெற்று, சுகமாக வாழ்ந்தான்.

குட்டீஸ்... ஒரு மனிதன் திருந்தினால், அவனை அரவணைத்து கொள்ள வேண்டும்; செய்த தவறையே சும்மா சுட்டிக் காட்ட கூடாது... சரியா!

Popular posts from this blog

Privacy Policy

Tamil BNS Privacy Policy

இரண்டு முட்டாள் ஆடுகள்