நரியின் தந்திரம்
நரியின் தந்திரம்
ஒரு பெரிய வனத்தில் வேட்டை ஆட வந்த ஒரு வேடன் மிருகங்களைப் பிடிப்பதற்காக ஒரு பொறியைத் தயாரித்து வைத்து விட்டு தனது வேட்டையை தொடரச் சென்றான்.
அப்போது வேடன் வைத்த பொறியை அறியாத ஒரு நரி தவறுதலாக அதில் சிக்கிக் கொண்டது. அந்த நரி தப்பிக்க எவ்வளவோ முயற்சி செய்தது. ஆனால், அந்த நரியின் வால் வசமாக அந்தப் பொறியில் சிக்கிக் கொண்டது.
அந்த நரி, "உயிர் பெரிதா! இல்லை வால் பெரிதா!" என்று யோசித்தது. அதன் மனதில் உயிர் தான் பெரியது என்று தோன்றியது.
அதனால் அது (நரி) தனது வாலை அறுத்துக் கொண்டு தப்பித்து ஓடியது. இதனால் வால் அருந்த அந்த நரி வேதனையும், வெட்கமும் அடைந்தது. அந்த நிலையிலேயே அது தனது சக நரிகள் வாழ்ந்த இடத்திற்குச் சென்றது.
வால் அறுந்த நரியைப் பார்த்து மற்ற நரிகள் சிரித்தன.
அதனைக் கண்ட வால் இழந்த நரி, "நண்பர்களே! இது தான் இன்றைய நவீன உலகின் நாகரிக பாணி (Fashion). எத்தனை காலம் தான் நாம் வால் உடனேயே அலைவது. எதிலும் ஒரு மாற்றம் வேண்டாமா? தவிர, இந்த வால் இருப்பதால் தான் நம்மை அனைவரும் மிருகம் என்று கூறி ஒதுக்கித் தள்ளுகின்றனர்.
இந்த வால் மட்டும் இல்லாவிட்டால் நாம் மனிதர்களைப் போல பலத்தையும், அறிவையும், பேசும் சக்தியையும் அடைவோம் என்று நான் சந்தித்த ஒரு முனிவர் கூட கூறினார்" என்றது.
வால் இழந்த நரியின் வார்த்தையைக் கேட்ட மற்ற நரிகள் அது கூறியதை அப்படியே நம்பியது.
"நீ சொல்வது எல்லாம் உண்மை தான் போல் இருக்கிறது. நாங்கள் அனைவருமே எங்கள் வாலை அறுத்துக் கொள்ளத் தயார் தான். ஆனால், எவ்வாறு எங்கள் வாலை அறுத்துக் கொள்வது" என்று கேட்டது.
அப்போது அந்த நரிக் கூட்டத்தில் இருந்து ஒரு பலமான குரல் சப்தமாக ஒலித்தது.
"தோழர்களே! இந்த வால் அறுந்த நரி பொய் சொல்கிறது. அது சொல்வதைக் கேட்காதீர்கள். உண்மையை நான் உரக்கச் சொல்கிறேன் அனைவரும் கேளுங்கள்.
ஒரு வேடன் வைத்த பொறியில் இதன் வால் சிக்கிக் கொண்டு அறுந்து விட்டது. அதற்கு நானே சாட்சி.
அதனை நான் பார்த்தேன். இது நம்மிடம் இந்த உண்மையை சொல்லாமல் ஏமாற்றப் பார்க்கிறது.
இதனை நாம் அடித்துத் துரத்த வேண்டும் அல்லது கொன்றால் கூட தப்பில்லை இல்லையேல் இது போன்ற தப்பான விஷயங்களைச் சொல்லி நம்மை வஞ்சித்து விடும்" என்றது.
உடனே எல்லா நரிகளும் சேர்ந்து வால் அறுந்த அந்த நரியை கொல்லத் தயார் ஆகின. இதனைக் கண்ட அந்த வால் அருந்த நரி அந்த இடத்தை விட்டே ஓடி விட்டது.
நீதி : பிறர் பேச்சை ஆராய்ந்து உண்மை என்று உறுதி ஆன பிறகே அதனைப் பின் பற்றுவது நல்லது. அப்படி இல்லையெனில் சங்கடமே நேரிடும். கேட்பார் பேச்சை கேட்டு கெட்டுப் போகாமல் இருப்பது தான் உண்மையான அனுபவம்.